|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
................................................................................................................
tamilparks
@
gmail.com
................................................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
தமிழராய் வாழ்ந்து; மனிதராய் உயர்ந்து நிற்ப்போம்!!சிறப்புக் கட்டுரை
மண் மலை காற்று ஆகாயம் கடல் எங்கிலும் யாரவது மனிதர்கள் இருக்கிறீர்களா??? வருத்தப் படாதீர்கள். இது உங்களை புண்படுத்துவதற்கான கேள்வியல்ல. மனிதம் என்பதை மீறிய நிறைய நாட்களுக்குப் பின் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாமெல்லோரும். அருகே துடிப்பவனை பார்த்து கருணை கொள்ளாத மனசு, எங்கோ துன்புறும் சக உறவை எண்ணி பதறாத உயிர்ப்பு, தன்னால் இயன்றதை பிறருக்கு செய்யக் கூட சுய நலம் தேடும் வாழ்க்கை மனிதத்தாலானதா தோழர்களே??? மறப்போம்; மறப்போம்; இதுவரை வாழ்ந்த, கோபம், குற்றம், கொடூரமென அத்தனையையும் மறப்போம். தன்னையும், சக மனிதர்களையும் மன்னிப்போம். இயன்றவரை மனிதம் போற்றி, நட்பு போற்றி, அன்பின் மிகுதியில் உலகத்திற்கான அக்கறையை முன்னிறுத்தி, வாழும் ஒவ்வொரு உயிர்காகவும் சிந்திப்போம், தவறு கண்டு கோபமுறுவதை போலவே நல்லதை கண்டு ஆனந்தப் படுவோம், வாழ்வின் வளமை கண்டு மகிழும் அதே தருணம் பிறர் வருத்தம் காண்கையில் வருத்தப் படுவோம் தோழர்களே. ஆடு ஆடாகவும் மாடு மாடாகவுமே வாழ்கிறது, மனிதன் தான் தன்னிலிருந்து கீழிறங்கி மிருகமாகவும், மிருகத்திலிருந்து திரும்புகையில் தன்னை கடவுளென்றும் எண்ணிக் கொள்கிறான். கடவுள் தாண்டி மிருகம் தாண்டி தன்னை மனிதனாக அடையாளப் படுத்த மட்டுமே முற்படுவோம். கடவுள், கொள்கை, வெற்றி, சுய மகிழ்ச்சி போன்ற எதுவுமே தன்னெதிரே துன்புறும் ஒரு மனிதனை விட பெரிதில்லை என்று எண்ணுவோம். மனிதனுக்காகவும் பிற உயிர்களுக்காகவும் கருணை கொள்வோம். கருணை கொண்ட மனதிற்கு சுயநலம் அவசியப் படாது. சுயனலமில்லாதவரால் மட்டுமே பிறர் பற்றி சிந்திக்க முடியும். பிறர் பற்றி சிந்திப்பவரால் தான் இந்த சமூகத்திற்கான தன் கடமையை ஆற்ற இயலும் தோழர்களே. எது சரி எது தவறென்று அறிய இயலாத எத்தனையோ அடையாளங்களோடு பிறந்து; வாழ்ந்தும் வாழாமலும் மடிகிறோம். அந்த அடையாளங்களை தனக்கு உடையதாய் மாற்றுவோம். நம் அளவுமானி 'மனிதம்' போற்றுவதன்றி வேறில்லையென ஒரு உறுதி ஏற்ப்போம். எதிரே வருபவன் என்னை போலவே, 'அத்தனை துன்பத்தையும் ஏதோ ஒரு வழியில் கொண்டிருப்பானோ' என அனுதாபம் கொள்வோம். பிறரை அடிக்கத் துணியும் நேரம்; நமக்கு பட்டால் வலிக்குமே, அப்படித் தானே அவனுக்கும் வலிக்கும் என்று புரிதலை ஏற்படுத்திக் கொள்வோம். எதிரியாயினும் ஒழித்துக் கட்ட எண்ணாமல் அவர் தவறை அவருக்குத் புரியவைக்கவே போராடுவோம். நல்லவராய் வாழ்வதென்பது கோழையாய் வாழ்வதற்கான அர்த்தம் என்று நிறைய பேர் எண்ணுகிறார்கள். வீரம் என்பதென்ன? என்னை உன்னால் வீழ்த்திட இயலாது என்று எதிரிக்குப் புரிய வைப்பது மட்டுமே வீரம். எதிரியை தோற்கடிப்பது நம்மில் சிறியவனை வீழ்த்திய கோழை தனமன்றி வேறில்லை தோழர்களே. பிறருக்கு கீழே நின்று அடிமை நிலை கொள்கையில் தனக்கு எத்தனை வலிக்குமோ, சொரணை உருத்துமோ அதே சொரணை ஒவ்வொரு உயிர்க்கும் இருக்காதா??? இருக்குமெனில் மனிதனுக்கிடையே எதற்கு வலியவன் சிறியவனென்னும் கீழ்தர பேதங்கள் என்று அமைதியாக சிந்திப்போம். அதேநேரம், நீ என்னை அடி உன்னை திருப்பி அடிக்க என் மனது இடம் தராது என்று சொல்லி முதுகு காட்டும் அளவிற்கு மனது இலகிவிடக் கூடாது. மனதை ஒரு கம்பீரமாக வைத்து எதையும் தீர்மானிக்கலாம் தோழர்களே. என்னருகே நிற்கும் என் தங்கையை எவனோ கற்பழித்தால், என் தாயை எவனோ கை நீட்டி அடித்தால், என் வயதான தந்தையை ஒரு மிருகம் கொன்று போட முன் வந்தால், என் வீட்டு ஜன்னல் திறந்து என் அந்தரங்கத்தை பற்றி கேலி பேசினால், என் கூரை பிளந்து வந்து எனை வெளியேற்றிவிட்டு, 'யாரோ வந்து கேட்கையில் இது என் வீடென்றால் 'தனக்கான நியாயத்தை உலகத்தின் முன்னிறுத்துவது தவறொன்றுமில்லை. இங்கு தான் நாம் உலகெலாம் பரவி இருந்தும், சோற்றுக்கும் ஒரு பிடி மண்ணுக்கும், சாகும் வரை அலைந்து திரியும், நம் இன மக்களை பற்றி எண்ணுதல் வேண்டும் தோழர்களே. நன்கு நிதானமாய் மனித கூறுகளோடு யோசித்தால், உலகமெலாம் அலைந்து திரிவது மட்டுமின்றி, யாருமற்ற அனாதை போல், எத்தனையோ உயிர்களை பிற இனத்தவர் கொன்று குவிப்பதையும், ஓட ஓட விரட்டுவதையும், மடிய மடிய கொள்வதையும் 'ஒரு நடுத் தர பார்வையில் நோக்கி, அவர்களின் ஆதரவற்ற நிலையை நினைத்தால், கண்களில் நீரை வரவழைக்கும் என்பது நிதர்சனம். அந்த பரிதாபமான நிலையை மாற்ற சரியான தீர்வு தான் என்ன??? நம்மால் படத்தில் வரும் கதாநாயகர்களை போல் ஓடி சண்டை போட்டு இந்தா உனது தேசமென பிடுங்கிக் கொடுக்க இயலுமா? அலல்து என் உயிர் போனால் பரவாயில்லையென எதையேனும் செய்து, தன் பற்றினை பறைசாற்றிவிட்டால் போதுமானதா? பிறருக்கென தன்னாலியன்ற உதவி செய்யலாம், பிறருக்காக உயிரையே தந்து விடுவேனென 'எல்லோராலும்' முன்வர முடியுமா? ஆனால் எல்லோராலுமே தன்னை ஒரு தமிழராக அடையாளப் படுத்திக் கொள்ள இயலும் இல்லையா. அப்படி தன்னை ஒவ்வொருவரையும் நாம், 'தமிழராக' அடையாளப் படுத்திக் கொள்கையில், ஒவ்வொருவரும் தமிழர் பண்பு மாறாது தமிழராகவே ஒன்று கூடும் பொழுதில், தமிழர் தமிழருக்காய் ஒரு சின்ன குரல் கொடுக்குமளவு இனப் பற்று கொள்கையில் பிறர் நம்மை தொடுவதற்கு தைரியமேனும் கொள்வார்களா??? ஒரு பாம்பு தெருவில் செல்பவரை எல்லாம் கொத்தி கொன்றதாம், கொலை பாதகத்திற்கு ஆளாகி கொடூரமாக வாழ்ந்ததாம். எல்லோரும் ஊர் பெரியவரிடத்தில் சென்று முறை இட்டார்களாம், அவர் இனி அங்ஙனம் நடந்தால் உன்னை கொன்று விட ஆணை பிறப்பிப்பேன் என்று கர்ஜித்தாராம். அப்படியெனில், இனி நான் யாரையுமே கடிப்பதில்லை என உறுதி கொடுத்ததாம் அந்த பாம்பு. அந்த உறுதியில் பிறழாத அந்த பாம்பு நாளுக்கு நாள் தான் யாரையுமே கொத்தாது ஒதுங்கி செல்ல, பாம்பின் மேலிருந்த பயம் எல்லோருக்கும் விலகி, உடன் விளையாட ஆரம்பித்து, கடைசியில் கல்லெறிந்து உதாசீனப் படுத்துமளவிற்கு பாம்பு கீழ்தரமாகிப் போனதாம். ஆளாளுக்கு அடித்து ரத்தம் வழிய அந்த பாம்பு அந்த ஊர் பெரியவரிடமே மீண்டும் சென்று முறையிட்டதாம். அதற்கந்த அந்த பெரியவர் "அட, முட்டாள் பாம்பே, நான் யாரையும் கடிக்காதே, துன்புறுத்தாதே, கொள்ளாதே என்று தானே சொன்னேன், பிறரிடம் அடி வாங்கி கோழையாக இரு என்று சொல்லவே இல்லையே என்றாராம். கூடவே, யாரையும் நீ கொத்தி கொள்ளவேண்டாம், அதேநேரம் பாம்பென்றால் அந்த பயத்தையும் மனிதர்களிடத்திலிருந்து குறைத்திட வேண்டாம்" என்றாராம். அந்த பாம்பிற்கான அதே நீதி நமக்குமானது தோழர்களே. நம் நோக்கம் யாரையும் பயம் கொள்ள செய்வதல்ல, ஆயினும், நாம் யாருக்கும் குறைந்தவர்களல்ல என்ற வலிமையை பிறருக்கு புரியவைக்கும் கடமைக்கு உட்பட்டு விட்டோம். உலகமெலாம் வாழும் மனிதரில் தமிழர் படை திரண்டால், எவரேனும் நம்மை எதிர்த்து நிற்பாரா??? பிறர் நம்முன் நின்று நம்மை காரி உமிழும், நம் மக்களை அடிமை தனப் படுத்தும், கொன்று குவிக்கும் கொடுமைக்கு எவரேனும் துணிவாரா??? தமிழனை அறத்தின் வழி பிழன்று தீண்டினால் இன்னொரு தமிழன் கேட்பான் என்ற நிலையை உலகிற்கு புரிய வைத்துவிட்டால், தீண்டுபவனுக்கு கொன்று குவிப்பவனுக்கு தமிழனை எங்கு தொட்டாலும் மொத்த தமிழருக்கும் வலிக்குமென பயம் வருமா வராதா? வரும் தோழர்களே. நம் ஒற்றுமை இன்மையே நம் இன அழிவிற்கு காரணமென இனியேனும் வருத்தம் கொள்வோம். நம் மொழி கூட மறந்து, திரித்து, பிற மொழியில் பேசுமளவு நம் அடையாளம் துறந்து நிற்பதால் தான் உலகின் மத்தியில் நாம் கேவலப் பட்டுப் போனோம். அதையும் மீறி, லட்சாதி லட்ச உயிர்களை கொன்று குவிக்கையிலும் ஏனென்று கேட்கும் துணிவை நம் எல்லோராலும் அடைய முடியாது போனதன் காரணமும் நம்மிடையே ஒருங்கி இல்லாத நம் ஒற்றுமையன்றி வேறில்லை தோழர்களே.. யாரையும் கொள்ளும் நோக்கம், பிறரை அழிக்கும் நோக்கம் நமக்கு இல்லை, வேண்டாமும். ஆனால், நம்மை பாதுகாத்துக் கொள்ளும் உணர்வு நமக்கு, குறிப்பாக, நம் இனத்திற்கு வேண்டும். அதற்கு நம்மை நாம் தமிழராக மட்டும் வாழ முதலில் உறுதி செய்துகொள்ளல் வேண்டும். பிற மொழியில் பேசுவதை முதலில் நிறுத்துவோம். தமிழரை எங்கு கண்டாலும் வெட்கமின்றி முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே பேசுவோம். இறந்த எத்தனயோ லட்ச மக்களுக்கு உறுதி தரும் பொருட்டாய், இருக்கும் உயிர்களையாவது, முல்கம்பியின் பின்னே முடங்கியும், தான் வீரநடை நடந்து வாழ்ந்த மண்ணை விட்டுவிட்டு அடிமை தனமாக பிற நாடுகளில் வாழும் அப்பாவி மக்களை, நம் உறவுகளை காப்பாற்றும் உறுதி ஏற்போம். அதற்க்காகவேனும், நம்மை முதலில் நாம், 'தமிழராய்' அடையாளப் படுத்தி வாழ முற்படுவோம். நம் ஒற்றுமையில் பயம் கொள்ளும் அந்நியருக்கு, உயிர் கொள்ளாத, அதே நேரம் தீண்டினால் கொன்று விடுவோம் என்ற பயம் இருக்குமளவிற்கு வாழ்ந்து, வீரமெனில் என்ன, வாழ்க்கை எனில் என்ன, அன்பு எனில் என்ன, பண்பு எனில் என்னவென்று மெல்ல மெல்ல புரிய வைப்போம், மனிதம் காப்போம், தமிழராய் வாழ்ந்து மனிதராய் உயர்ந்து நிற்போம் தோழர்களே!
-------------------------------------------------------------------
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|