மூளை என்னும் கணினியைக்
காக்கும் ஆன்டிவைரஸ்

ஒவ்வொரு முறை புதிய கணினிகள் கண்டுபிடிக்கப்படும் போதும், அதன்
நினைவுத்திறன், செயல்திறன் ஆகியவற்றின் சிறப்பினையே யாவரும் வியந்து
பார்ப்பது வழக்கம். ஆனால் எனக்கு அந்தக் கணினியைக் கண்டறிந்த
மனிதமூளையை எண்ணியே வியப்புத் தோன்றும்.
ஆம் மனித மூளையை அடிப்படையாகக் கொண்டே கணினிகள் வடிவமைக்கப்படுகின்றன.
கணினியைப் போலவே மனித மூளை செயல்படுகிறது. கணினியை நச்சுநிரல்(வைரஸ்)
தாக்கி அழிப்பது போலவே மனிதமூளையை பல நச்சுநிரல்கள் ( இன்பம், துன்பம்,
) தாக்கி அழிக்கின்றன. கணினியைப் பாதுகாக்க நச்சுநிரல் எதிர்ப்பு
மென்பொருள்கள் (ஆன்டிவைரஸ்) தேவைப்படுவது போலவே மனித மூளை என்னும்
கணினியைக் காக்கவும் நச்சுநிரல் எதிர்ப்புமென்பொருள்கள்
தேவைப்படுகின்றன.
இன்பங்கள் தோன்றுவது நேர்மறை எண்ணங்களால்…
துன்பங்கள் தோன்றுவது எதிர்மறை எண்ணங்களால்…
அளவுக்கதிகமான இன்பமும் மூளையைச் செயலிழக்கவைக்கும்..
அளவுக்கதிகமான துன்பமும் மூளையைச் செயலிழக்கவைக்கும்..
சொர்க்கம்! நரகம்! இரண்டும் எங்கோ இல்லை …
நம் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களாலேயே இவ்விரண்டும்
தீர்மானிக்கப்படுகின்றன.
இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை!
துன்பம் வரும் போது சிரி என்றார் வள்ளுவர்..
துன்பத்தை எதிர்கொள் - துன்பத்தை இன்பமாகக் காண்
இன்னாதது தான் உலகம் - அதில் இனியவை காண்பர் உலகின் இயல்பு உணர்ந்தோர்
என்கிறார் பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர்.
எதிர்மறை எண்ணங்கள் என்னும் நச்சுநிரல் மூளையைத் தாக்கும் போது நேர்மறை
எண்ணங்கள் என்னும் எதிர்ப்பு நச்சுநிரலைப் பயன்படுத்தி மூளையை சோதனை
செய்து கொள்ளவேண்டும் என்று இயம்புகின்றது இவர்தம் பாடல், பாடல் இதோ,
“ முழவின் பாணி!
ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.
புறநானூறு 194.
திணை - பொதுவியல்
பெருங்காஞ்சி
பாடியவர் - பக்குடுக்கை நன்கணியார்
நிலையாமை உணர்த்துதல் பெருங்காஞ்சி எனப்படும். இன்னாதம்ம இவ்வுலகம்,
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே எனக் கூறியதால் இப்பாடல்
பெருங்காஞ்சித் துறையானது.

ஒரு வீட்டில் சாக்காட்டுப்பறை ( சாவுக்கொட்டு மேளம்) ஒலிக்கிறது. ஒரு
வீட்டில் திருமணத்துக்கு இசைக்கும் முழவோசை முழங்குகிறது. கணவரோடு
கூடிய மகளிர் மலர் அணிந்து மகிழ்ச்சியோடு உள்ளனர். கணவரைப் பிரிந்த
மகளிர் வருத்தத்துடன் கண்களில் கண்ணீர் வரக் கலங்குகின்றனர்.
இந்த உலகைப் படைத்தவன் என்று ஒருவன் இருந்தால் அவன் நல்ல
பண்பில்லாதவனாகவே இருப்பான். ஏனென்றால் தாங்கிக்கொள்ள இயலாத துன்பங்களை
இன்பங்களுக்கிடையே வைத்தானே !
என்பது இப்புலவரின் புலம்பலாகவுள்ளது.
இன்னாமை நிறைந்த இவ்வுலகில் இனிமை காணுவோர், உலகின் இயல்பை
நன்குணர்தோராவர் என்னும் இப்பாடல்வழி,
உலகம் இன்னாதது தான் - அதன் இயல்பினை உணர்ந்துகொண்டால் அது
இனிமையானதுதான் என்கிறார் இப்புலவர்.
இனியது என்பது இன்பமானது,
இன்னாதது என்பது துன்பமானது என நாம் வரையறைசெய்து வாழ்ந்து வருகிறோம்.
நம்மைச்சுற்றி நாம் வாழும் வாழ்க்கையில் கணக்கிலடங்கா இன்பமும்,
துன்பமும் நிறைந்திருக்கிறது. இன்பம் வந்தபோது மகிழும் மனது துன்பம்
வந்தபோது துவண்டு போகிறது.
எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் துவளச் செய்யும்
நேர்மறை எண்ணங்கள் நம்மை எழச் செய்யும்

“கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன”
ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …
இன்னும் யார் யாரையோ நம்பியே வாழ்கிறான் …
தன்னைத்தவிர!
“மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச்செல்வதில்லை”
ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில்
பாதியைத் தொலைத்துவிடுகிறான்.
ஆசை அவனை ஆட்டிவைக்கிறது.
நாம் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை எப்போதும் அமையாது..
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை!
வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்தின் மதிப்புத் தெரியாது,
வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல இன்பத்தின் அருமை துன்பத்தில் தான்
தெரியும்.
இன்பம் துன்பம் என்பதற்கான அளவீடு அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்
என்பதிலேயே அமைகிறது.
துன்பம் நாம் வரவழைத்துக்கொள்வது !
இன்பம் எப்போதும் நம்மோடு இருப்பது !
என்பதை கூறுவதே இப்பாடல்.
யாரும் தொலைக்கவில்லை !
ஆனால் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் …..
நிம்மதியை..!
நம் மூளையை அழிவிழிருந்து காக்கும் ” நச்சுநிரல் எதிர்ப்பு
மென்பொருள்கள்” என்பவை நேர்மறை எண்ணங்களே!
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் இன்னாத உலகமும் இனியதாகும்..!
---------------------------------------------------
நன்றி
- முனைவர்
இரா.குணசீலன் |